திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கட்சியின் முதன்மை செயலாளராக ஆக்கப்பட்ட பின்பு திருச்சி திமுகவை 3 மாவட்டமாக பிரித்து அன்பில் மகேஷ், காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகியோரை நியமித்தனர்.
கே.என்.நேரு மாவட்ட செயலாளராக இருந்த சமயத்தில் அன்பில் மகேஷ் புதிதாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது கே.என்.நேருவிடம் இருந்து சிலர் அன்பில் மகேஷ்க்கு மாநகருக்குள் பிரமாண்டமான வரவேற்ப்பு கொடுத்து அழைத்து சென்றது கே.என்.நேரு ஆதரவாளர்கள் இடையே கொஞ்சம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
கே.என்.நேரு மாநில அரசியலுக்கு சென்றதால் இனி மாவட்ட அரசியல் அன்பில் மகேஷ் சொல்கிறப்படி தான் நடக்கும். இதனால் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அதே நேரத்தில் கே.என்.நேரு மாநில அரசியலுக்கு சென்றதால் உள்ளூரில் அரசியல் பண்ண முடியாமல் போய் விடுமோ என்கிற பயத்தில் இருந்த நேரத்தில் உள்ளூர் விசேஷங்களுக்கு நேரு கலந்து கொள்ள முடியாமல் போன நிலையில் கே.என்.நேரு மகன் அருண் நேருவை களத்தில் இறக்கி பட்டாசு, டிரம் செட் என திருச்சியை அதிர வைத்து இருந்த நிலையில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் என தலைமை அறிவித்து இருந்தது.
தற்போது பரபரப்பான அரசியல் பின்புலத்தோடு புதிய மாவட்ட செயலாளர்கள் பொறுப்பேற்ற பின்பு திருச்சியில் நடைபெறும் முதல் செயல்வீரர்கள் கூட்டம் என்பதால் திருச்சி திமுக கட்சியினர் இடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு, "நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் எனது சொந்த ஜாதிக்காரர்களை அருகில் வைத்துக் கொள்வது கிடையாது. நான் ஜாதி அரசியல் பண்ணாத காரணத்தால் தான் அனைவரின் ஆதரவால்தான் நான் இப்போது முதன்மைச் செயலாளராக உயர்ந்திருக்கிறேன். உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்.
இதேபோல் திருச்சி மாவட்டத்தில் தற்போது பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட செயலாளர்களும் கடைபிடிக்க வேண்டும். திமுகவில் எனது பரிந்துரையால் பாராளுமன்றத்தில் நியமன எம்பியாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் திருச்சி மாநகர் அளவில் பொறுப்பு வகிக்ககூடிய அன்பழகனுக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தேன். அன்பில் மகேஷக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டதால் தான் அன்பழகனுக்கு கிடைக்காமல் போனது. தலைவர் அன்பகழனை அழைத்து பேசினார். கட்சியில் புரோமோசன் உண்டு. மேலும் மாவட்ட பொறுப்பு எனது பரிந்துரை மூன்று பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார். கலைஞர் கருணாநிதி திருச்சியில் எப்போது கலைஞர் அறிவாலயம் கட்ட போகிறாய் என்று கேட்டார். உடனடியாக திருச்சியில் சிறிய அளவில் இடத்தை வாங்கி அதை பின்னர் பெரிய அளவில் கட்டி முடித்தேன். கட்சியில் நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதால் தான் திருச்சியில் என்னால் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைய முடிந்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் உள்ள 90 சதவிகிதத் தொகுதிகளில் தி.மு.க-வை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஆரம்பத்தில் பேசிய அன்பில் மகேஷ், "பொய்யாமொழி எனது அப்பா மறைவின்போது, நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, மறைந்த ராமஜெயம் என்னை அழைத்து, `இப்படியே இருக்கக்கூடாது மகேஷ். அரசியலுக்கு வரத்திட்டமிடுங்கள்' என்றார். அதன் தொடர்ச்சியாகவே, நான் தளபதி மற்றும் உதயநிதி ஆகியோர் மூலம் அரசியலுக்கு வந்தேன். என்னைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளராக எந்தவொரு முடிவு என்றாலும் அண்ணன் நேருவை கேட்டுத்தான் முடிவெடுப்பேன்" என்றார்.பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் அன்பும், பாசமும் நெகிழ்ச்சியாக முடிந்தது திருச்சி திமுகவினர் இடையே பெரிய உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.