கரோனா வைரஸ் பீதியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை கண்டு அரசியல் கட்சியினர் தங்களால் முடிந்த அளவுக்கு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி தனது தொகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஆகிய இரண்டு ஒன்றியங்களில் உள்ள பொதுமக்களும், தூய்மை பணியாளர்களுக்கும் அரசி மற்றும் பலசரக்கு பொருட்களுடன் காய் கனிகளையும் வீடு வீடாக வழங்கினார். அதுபோல் சத்திரப்பட்டி அருகே உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்கும் நிவாரண உதவிகளை சக்கரபாணி வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் வசிக்ககூடிய ஏழை - எளிய குடும்பங்கள் என கணக்கு எடுத்து ஒரு வார்டுக்கு 500 முதல் 600 பேர் என 18 வார்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்க எம்.எல்.ஏ.சக்கரபாணி முடிவு செய்தார். அதன் அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும் ஒரு வார்டுக்கு பத்து பேர் வீதம் அழைத்துவந்து பள்ளிகூட விளையாட்டு மைதானத்தில் சமூக இடைவெளியை கடை பிடித்து முககவசம் அணிந்து உட்கார்ந்து இருந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு அரசி மற்றும் மளிகை பொருட்களுடன் காய் கறிகளையும் எம்.எல்.ஏ. சக்கரபாணி வழங்கினார்.
மீதியுள்ள பொதுமக்களுக்கு அந்தந்த பகுதியில் இருக்கும் கட்சி பொறுப்பாளரிடம் கொடுத்து வீடு வீடாக சென்று அந்த நிவாரண உதவி பொருட்கள் உடனடியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.