![ponnaiyan about admk single chief issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/XhmWQkdI9ixDDBV8sglfd5UiUNTN1zGm2PexvnrfaF4/1655467359/sites/default/files/inline-images/hk_18.jpg)
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் தங்களது ஆதரவாளர்களோடு தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடுமையான வார்த்தை மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன. இவற்றிற்கு மத்தியில், இவ்விவகாரம் தொடர்பாகப் பொதுவெளியில் பேசிய ஜெயக்குமார் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், வருகின்ற 23 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடந்தது. பொன்னையன், வைகைச்செல்வன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்கள் சந்தித்த அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், " ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்காக ஜெயக்குமார் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உண்மை இல்லை.
அதிமுக ஒற்றைத்தலைமைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஒற்றைத்தலைமை கோரிக்கையைத் தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஒற்றைத் தலைமை தேவையா என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவும் முடிவு செய்யும். திட்டமிட்டபடி பொதுக்குழு வரும் 23ம் தேதி 100க்கு 1000% நடைபெறும். ஆனால், அதில் ஒற்றைத் தலைமை குறித்த முடிவுகள் பேசப்படுமா என எனக்குத் தெரியாது. எல்லா கட்சியிலும் பிரச்சனைகள் எழுவது இயல்புதான். பொதுக்குழு, செயற்குழு தொடர்பாக நாளை நடைபெறும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்குத் தேவைப்பட்டால் அழைப்பு விடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.