அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தினகரன் கூறுகையில்,
இடைத்தேர்தலில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என திவாகரன் கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். பாவம். அவர் உடம்பு முடியாதவர் ஏதோ பேசியிருக்கிறார். அதை பெரிதாக எடுத்துக் கொண்டு என்னிடம் கேட்கிறீர்கள். அவர் எல்லாவற்றையும் பேசிவிட்டு போகட்டும். நாம் செயலில் காண்பிப்போம்.
எம்.ஜி.ஆருக்கு தானாகவே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் மத்திய அரசு தானாகவே முன்வந்து பாரத ரத்னா விருது வழங்கும் சூழ்நிலை உருவாகும்.
ஜெயலலிதா மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் தி.மு.க.வினர் வழக்கு போட்டனர். யாராக இருந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். ஜெயலலிதா இறந்தவுடன் கொலை செய்து விட்டார்கள் என கிளப்பி விட்டதே தி.மு.க. தான். பொய்யான பிரசாரம் என்றைக்கும் நிலைக்காது. அது தானாகவே நீர்த்து போய்விட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள்.
மன்னார்குடியில் பணம் கொடுத்து மக்கள் கூட்டத்தை கூட்டியதாக காழ்ப்புணர்ச்சி காரணமாக திவாகரன் கூறுகிறார். லெட்டர் பேடு கம்பெனியில் கூறுவதை எல்லாம் பெரிய கேள்வியாக கேட்கிறீர்கள். 30 வருடமாக பொதுச்செயலாளர் பெயரை வைத்து ஏமாற்றி வருகிறார்கள். கழிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் தான் திவாகரன் கட்சியில் இணைவார்கள். தேவையில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள்.
மத்திய அரசு அடிமைகளை வைத்து தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. தேவையில்லாத சாலை, மக்கள் விரும்பாத ரோட்டிற்காக ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு பெற்றுள்ளார்கள். தமிழக மக்களுக்காக எதையும் கேட்கமாட்டார்கள். இவ்வாறு கூறினார்.