கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில், துணைத் தலைவர் ஜான்சிமேரி தங்கராசன் முன்னிலையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன் வரவேற்றார். கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ஒன்றிய அலுவலர் தீர்மானங்களை படிக்க முயன்றபோது, பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை தடுத்து, விவாதம் செய்ய வேண்டுமென கூறினர். அதனை தொடர்ந்து, '3.33 கோடி ரூபாய் ஒன்றிய பொது நிதி இருக்கும் நிலையில் கவுன்சிலர்களுக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை?' என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தற்போது ஒரு கவுன்சிலர் வீதம் 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக அலுவலர் கூறினார். இதனை ஏற்க மறுத்த கவுன்சிலர்கள் 15 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனை அலுவலர் ஏற்காமல் மழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் "2 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் நிதி ஒதுக்கீடு பெற்று தராத சேர்மன், நிர்வாக திறமையற்றவர்" என குற்றஞ்சாட்டி, வெளிநடப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.