தமிழக காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை சத்தியமூர்த்திபவனில் நடத்தினார் கே.எஸ்.அழகிரி. இதில், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு உள்ளிட்ட காங்கிரசின் முன்னாள் தலைவர்கள், 72 மாவட்ட தலைவர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக உழைப்பது, கூட்டணியில் எத்தனை இடங்கள், என்னென்ன தொகுதிகள் பெறுவது உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய பலரும், ’’ திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளைப் பெற வேண்டும். காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து அவைகளை திமுகவிடம் பேசி வாங்க வேண்டும் ‘’ என்பதை வலியுறுத்தினர்.
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், ‘’ தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. இரட்டை இலக்கத்தில் சீட்டுகளை வாங்க வேண்டும் என்கிறார்கள். நல்லதுதான். ஆனா, பத்திரிகைகளில் 5 சீட்டு, 7 சீட்டுன்னு எழுதுகிறார்கள். நமக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. இளம் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக அறிவித்திருக்கும் சூழலில் நமக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. அதேசமயம், கூட்டணி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்கள் சில விசயங்களைப் பேசி உறுதிசெய்ய வேண்டும். அதாவது, நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. அது குறித்தும் திமுகவிடம் பேச வேண்டும். மாநகராட்சிகளில் எத்தனை மேயர் பதவி ? எத்தனை துணை மேயர் பதவி ? நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் எத்தனை இடங்கள் ? என உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலைகளிலும் காங்கிரசுக்கான சீட் பகிர்வுகளைப் பேசி முடியுங்கள் ‘’ என கேட்டுக்கொண்டார்.
முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும் போது, ‘’ மத்தியிலுள்ள மோடி அரசுக்கு எதிராகவும், மாநிலத்திலுள்ள எடப்பாடி அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்த வேண்டும். பிரச்சாரத்தின் போது இவர்களின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளின் பட்டியல் முழுமையாக வந்து சேரவில்லை. அதில் கவனம் செலுத்துங்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் 40 இடங்களிலும் ஜெயிக்கும். ராகுல்காந்தி பிரதமராக நாம் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும் ‘’ என்றார் அழுத்தமாக.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கட்சியின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி பேசும் போது, ‘’ பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் நாம் ஆட்சியில் இல்லையென்றாலும் காங்கிரஸ் இப்போதும் உயிரோட்டமாகத்தான் இருக்கிறது. உயிரோட்டமாக இருந்தும் நம்மால் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை என பல முறை யோசித்திருக்கிறேன். ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம், நம்மிடையே உள்ள கோஷ்டி மனப்பான்மைதான். கோஷ்டிப் பிரச்சனைகளை ஒழித்து நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் காங்கிரஸின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும். அதனால், கோஷ்டி மனப்பான்மையை புறம் தள்ளி ஒரே குடும்பமாக நாம் இயங்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டுமெனில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 இடங்களையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்ற வேண்டும். கடுமையாக உழைத்தால் இதனை நம்மால் சாதிக்க முடியும். ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் சக்தி திட்டத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். மோடி அரசை வீழ்த்தி ராகுல்காந்தி பிரதமராவார் ‘’ என்றார். நம்பிக்கையான அவரது பேச்சு, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் மற்றும் தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து 8 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும், காங்கிரசையும் ராகுல்காந்தியையும் தொடர்ந்து விமர்சிக்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.