நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, அமமுக, மநீம என ஐந்துமுனை போட்டி நிலவியது. அதில், திமுக தனிப்பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மேலும், அதிமுக எதிர்க்கட்சியாக அமரவிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகினர். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார். அப்போது அவர், “இங்கு ஜனநாயகம் இல்லை” என்று கூறி கட்சியைவிட்டு வெளியேறினார்.
இதற்கு மநீம தலைவர் கமல்ஹாசன், அதனைக் கண்டித்து 'துரோகி' என அறிக்கை வெளியிட்டிருந்தார். இது மக்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகள் இடையிலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது தனது தனிப்பட்ட காரணங்களால் மிகுந்த சிந்தனைக்குப் பிறகு கட்சியைவிட்டு விலகுவதாக அக்கட்சியின் மதுரவாயல் வேட்பாளர் பத்மப்ரியா தெரிவித்துள்ளார். இதனை அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு
— Padma Priya (@Tamizhachi_Offl) May 13, 2021
என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கிறேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.