இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. தமிழகத்திலும், கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவருகிறது. ஒவ்வொரு நாளும் கரோனா பரவலின் எண்ணிக்கையும், மரணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது தமிழக அரசு, கரோனாவைக் கட்டுப்படுத்தவும், மேலும் தொற்று பரவாமல் இருக்கவும் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதேவேளையில் தமிழகத்திற்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜனையும் மத்திய அரசிடம் இருந்து வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தருவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்யவும், மத்திய அரசு தருவதாக தெரிவித்துள்ள ஆக்சிஜனை உடனடியாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் உள்ள சில புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவை உண்மையாக இருக்கக்கூடாது என்று நம்புவோம்.
தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனைகள் எதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்; ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரு நோயாளி கூட உயிரிழக்கவில்லை என்பதுதான் பெருமிதம் அளிக்கும் நிலையாக இருக்கும்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அறிவித்துள்ள தினசரி ஒதுக்கீடான 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இப்போதிலிருந்தே பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.