ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் ஏராளமான பணத்தை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்து வருகிறார்கள் என தேமுதிக மாநில துணைச் செயலாளர் சுதீஷ் குற்றம் சாட்டினர். அவர் 10ந் தேதி ஈரோட்டில் அக்கட்சியின் வேட்பாளர் ஆனந்தை அறிமுகப்படுத்தி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து எங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்” என்றார். திமுக அமைச்சர்கள் ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்காக தற்பொழுது அரசு ரூபாய் 300 கோடி மற்றும் ரூபாய் 450 கோடி ஒதுக்கி உள்ளதாகக் கூறுவது, இந்த சமயத்தில் விசைத்தறி மற்றும் கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும் என்று கூறுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானது. திமுக பொதுவாக பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தல் சமயத்தில் வெற்றி பெற முயலும். ஆனால், மக்கள் ஆதரவோடு நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது கட்சியின் சார்பில் 40 பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என முதல்வர் அப்படித்தான் கூறுவார். ஆனால், மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் உள்ளனர்” என்றார்.