நான்கு படுக்கை அறை, அலுவலக அறை, இரண்டு கார்கள் நிறுத்தும் அளவுக்கு பார்கிங் வசதியுடன் புதிய எம்பிக்கள் குடியே டெல்லியில் 36 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த மாத இறுதியில் இந்த குடியிருப்புகள் அனைத்தும் மக்களவை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் இவை எம்பிக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 36 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய பொதுப்பணி துறை இந்த கட்டிடங்களை கட்டியது. இவற்றில் ஒவ்வொரு பிளாட்டிலும் 4 படுக்கையறைகள், லிப்ட் வசதி, அலுவலக அறை, இரண்டு கார் பார்க்கிங் பகுதி மற்றும் மாடுலார் கிச்சன் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் எம்பி.க்கள் தங்குவதற்காக அரசு குடியிருப்புகள் போதுமானதாக இல்லை. ஒவ்வொரு முறை தேர்தலுக்கு பின்னர் பதவியிழந்த எம்பி.க்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உடனடியாக தங்களது அடுக்குமாடி வீடுகள் மற்றும் பங்களாக்களை காலி செய்வதில்லை. இவர்களில் பலரும் வீட்டை காலி செய்வதற்கு அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பி.க்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்.
இந்நிலையில் கடந்த முறை பொறுப்பேற்ற பாஜ தலைமையிலான அரசு இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டது. இதற்காக புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.