அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.
இதையடுத்து தொண்டர்கள் இனி அ.தி.மு.க. நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கட்சியின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் வரும் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அமமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி,
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இருவரும் ஒற்றுமையாக செயல்படவில்லை. பாஜகவின் தயவால் செயல்பட்டார்கள். அன்று தர்மயுத்தம் நடத்துவதாக நாடகம் ஆடிய ஓ.பி.எஸ். அதிமுகவை உடைத்தார். இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். அப்போது எல்லோரையும் ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சராக்கினார் சசிகலா. அதன் பிறகு இவர்கள் பாஜக சொல்வதை கேட்க ஆரம்பித்தார்கள். ஓ.பி.எஸ்.ஸை துணை முதல் அமைச்சராக்கினார்கள். அதன் பிறகு அதிமுக பைலாவை மாற்றினார்கள். பொதுச்செயலாளர் என்பதை எடுத்து விட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கொண்டு வந்தார்கள்.
அப்போது அமைதியாக இருந்த ராஜன் செல்லப்பாவுக்கு திடீரென ஞானோதயம் எங்கிருந்து வந்தது. ராஜன் செல்லப்பா மகன் தேர்தலில் தோல்வி அடைந்தார். இவர்களுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதை மக்கள் தெளிவுப்படுத்திவிட்டார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால்தான் இந்த கட்சி இருக்கிறது.
இவர்களுக்கு கட்சியையோ, ஆட்சியையோ நடத்தக்கூடிய திறமைகள், ஆளுமைகள் இல்லை. ஒற்றைத் தலைமை என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள். இரண்டு வருடமாக அமைச்சர்கள் பேசுகிறார்கள். அவர்களை யாரால் தடுக்க முடிந்தது. ஜெயலலிதா இருந்தபோது இப்படி பேசினார்களா? ஆட்சியை தக்க வைக்க இப்போது போராடுகிறார்கள்.
கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என்று சசிகலா சொன்னபோது, அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றார்கள். எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று யாராவது சொன்னார்களா? ஆகையால் அதுதான் தலைமை. அன்று சசிகலாவோ, டிடிவி தினகரனோ இல்லையென்றால் இன்று இந்த ஆட்சியே இல்லை.
கட்சித் தலைமைக்கு எதிராக எப்போது குரல் ஒலிக்க ஆரம்பித்ததோ, அது தொடர்ந்து ஒலிக்கத்தான் செய்யும். நிச்சயமாக இரட்டை தலைமை என்பது அதிமுகவில் முடியாது. தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த கட்சியையோ, ஆட்சியையோ வழிநடத்தக்கூடிய திறமையும், ஆளுமையும் இல்லை என்றார்.