Skip to main content

“திரும்பவும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்” - சு.வெங்கடேசன் எம்.பி.க்கு ஆளுநர் தமிழிசை காரசார பதில்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

"I repeat, don't regret" M.P. Governor Tamilisai Karasara's reply to S. Venkatesan

 

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆளுநர் தமிழிசையின் கருத்து குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்த கருத்துக்கு ஆளுநர் தமிழிசை பதிலளித்துள்ளார்.

 

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழக மக்கள் எங்களைப் போன்ற நிர்வாகத்திறன் உள்ளவர்களை அங்கீகரிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு திறமையானவர்களை அடையாளம் கண்டுகொள்கிறது. பிரதமர், உள்துறை அமைச்சர் எங்களது திறமைகளை அடையாளம் கண்டு ஆளுநர்களாக நியமிக்கின்றனர். ஆனால், தமிழ் மக்கள் எங்கள் திறமைகளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மக்கள் எங்களை எம்.பி. ஆக்கியிருந்தால் அமைச்சர்கள் ஆகியிருப்போம். ஆனால், எங்கள் திறமைகளை வீணடிக்க வேண்டாம் என மத்திய அரசு கருதி எங்களை ஆளுநர் ஆக்கியுள்ளது" எனக் கூறினார். 

 

இந்நிலையில் நேற்று இது குறித்த செய்தியின் படத்தை பகிர்ந்து எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், "ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரீட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டுவிட்டார் எனில் அது போலிச்சான்றிதழ் இல்லையா?" எனக் கூறியிருந்தார். 

 

எம்.பி. சு.வெங்கடேசன் பதிவிற்கு ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ராஜ்பவன்கள் டுடோரியலாக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல... அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான். டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள். தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல. தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம். அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே.. நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். இறுமாப்பு வேண்டாம். ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும். அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை. மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்