நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் கொடுக்கப்பட்டன. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. மேலும் தேமுதிக மாநில கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. அதோடு தேமுதிக 2 சதவிகித வாக்குகளை மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பெற்றது. இதனால் தனது வாக்கு வங்கியை பெருமளவு இழந்தது. இதற்கு காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு போல் கட்சி பணியில் இல்லாததும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதே போல் பிரேமலதா கட்சி நடத்தும் முறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது என்கின்றனர். இதனால் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று திமுக தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேற்று தேமுதிக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஆட்லின் மினி, மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர்கள் சுபா, என்.எல்சி, தாசம்மாள், அகஸ்தீஸ்வரம் மாவட்ட வர்த்தக அணி முன்னாள் துணைச் செயலாளர் ஏசு ராஜ செல்வன், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தேமுதிக கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அப்போது கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன்,எம்.எல்.ஏ உடனிருந்தார்.