தென்காசி ஆலங்குளம் பகுதியில் நடைபெறும் கனிம வளக் கொள்ளையை எதிர்த்து தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழகத்தில் நிச்சயமாக கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டிய விஷயம். தினம்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்குக் கனிமவளம் கடத்தப்படுவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கேரளாவில் இருந்து ஒரு லாரியாவது கனிம வளத்தை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் வருமா? கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள், கோழி கழிவுகள், மருத்துவக் கழிவுகளையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து தமிழகத்தை குப்பைக்காடாக மாற்றக்கூடிய பொருட்கள் மட்டும் கேரளாவில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பைக்கூலமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று சோதனை நடக்கிறது. காவல்துறையினர் கொஞ்சம் கூட வாய் கூசாமல் சொல்கிறார்கள்' எங்களுக்கு சொல்லவே இல்லை; தகவல் கொடுக்கவில்லை; தகவல் கொடுத்திருந்தால் நாங்கள் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்திருப்போம்' என்று சொல்கிறார்கள். ரெய்டு என்றால் சாதாரண மனிதனுக்கு கூட தெரியும். யாருக்கும் சொல்லாமல் திடீரென வருவதற்கு பெயர்தான் ரெய்டு. இவர்கள் என்ன சம்பந்தம் பேச வருகிறார்களா அல்லது டின்னருக்கு வராங்களா தகவல் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு வருவதற்கு. அப்படி வந்தால் அதற்கு பெயர் ரெய்டா. இது கூட காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? அப்பொழுது எந்த அளவிற்கு தமிழக அரசிற்கு காவல்துறை கைப்பாவையாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது'' என்றார்.