தி.மு.க.வில் உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கிளைக் கழகத்தில் தொடங்கி பேரூர் கழகம், ஒன்றிய பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர பகுதி செயலாளர்கள், மாநகர செயலாளர்கள் வரையிலான திமுகவின் உட்கட்சித் தேர்தல் கடந்த ஒரு மாதமாக நடந்து முடிந்ததின் பேரில் பொறுப்பாளர்களையும் தேர்வு செய்து திமுக அறிவித்ததின் பேரில் திமுகவினர் கட்சி பணியாற்றி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து தான் இறுதியாக மாவட்டச் செயலாளருக்கான தேர்தல் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள சிட்டிங் மாவட்டச் செயலாளர்களும் அதோடு மாவட்டச் செயலாளர்களுக்கு போட்டி போடுபவர்களும் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அந்தவகையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி கடந்த 2013 முதல் தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்துவருகிறார். இது மட்டுமின்றி ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் சக்கரபாணி அமைச்சர் பதவியை பெற்றார்.
அவர் கட்சி தொண்டர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங்களையும் செய்துவருகிறார். இந்த நிலையில், மாவட்டச் செயலாளருக்கான தேர்தலை திமுக தலைமை அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் மேற்கு மாவட்டச் செயலாளருக்கான விருப்ப மனுவை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திமுக தலைமையிடத்தில் கொடுத்தார். அதைத் தொடர்ந்து மேற்கு மாவட்டத்திற்கு யாரும் போட்டி போட விருப்ப மனு கொடுக்காததால் மீண்டும் மேற்கு மாவட்ட செயலாளராக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதை கண்டு மேற்கு மாவட்ட கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்பட மாவட்ட அளவில் உள்ள திமுகவினர் அமைச்சர் சக்கரபாணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.