திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வத்தலகுண்டில் காளியம்மன் கோவில் அருகே தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன் தலைமையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பின்னர் நிலக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற உதயநிதிக்கு நான்கு முனை சந்திப்பில் ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன், சௌந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அங்கு மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மற்றும் மறைந்த பேரூர் செயலாளர் கருணாநிதி ஆகியோர் படங்களுக்கு மலர்த்தூவி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, பொன்னம்மாள் படத்தின் அருகே அவரது பேத்தியும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளருமான ஜான்சிராணி காத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அங்கு வந்த உதயநிதி ஸ்டாலின், "பேசிவிட்டு வந்து மலர் தூவுகிறேன் எனக் கூறியவாறே பேசத் தொடங்கியவர், தமிழக அமைச்சர்கள் மந்திரிகளாக இல்லாமல் மங்குனிகளாக இருக்கிறார்கள் என்றார். அப்போது பொதுமக்களிடம் 'தெர்மகோல் யார்?' என்று உதயநிதி கேட்க அங்கு கூடியிருந்தவர்கள் செல்லூர் ராஜு என்றனர். அதேபோல், 'மெயின் ரோட்டுக்கு வாம்மா' எனக் கூற ஜெயக்குமார் என்றனர். 'பஃப்பூன்' எனக் கூற ராஜேந்திரபாலாஜி என்றனர், இவ்வாறு தமிழக அமைச்சர்களை பொதுமக்களின் வாயிலாகக் கலாய்த்த உதயநிதி, இறுதியில் தமிழகத்தில் பொருள்களின் விலைகளும் பன்மடங்காக உயர்ந்துவிட்டது. பெட்ரோல் ரூபாய் 100- ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன. இந்தத் தொகுதியில் தி.மு.க. ஜெயித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில், சரியான வேட்பாளரை தி.மு.க. தலைவர் நிறுத்தவுள்ளார். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துப் பேசி முடித்தார்.
தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டுவாங்கித் தேர்தலில் நின்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பொன்னம்மாள் பேத்தி ஜான்சிராணி உதயநிதி பேச்சால் ஒட்டு மொத்தமாக அப்செட்டாகி நின்றார். வேனிலிருந்து கீழே இறங்கிய உதயநிதி, ஜான்சிராணியை அவ்வளவாகக் கண்டுகொள்ளாமல் இருவர் படத்திற்கும் மலர்த்தூவி வணங்கிவிட்டு பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்தார். உதயநிதியின் பேச்சால் உற்சாகமான தி.மு.க.வினர் சீட்டு ரேஸில் களமிறங்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த தேர்தல், பிரச்சார சுற்றுப்பயணத்தின் போது உதயநிதியுடன் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.