Skip to main content

கே.எஸ். அழகிரிபோல், ஸ்டாலினும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்... திருச்சி வேலுச்சாமி பேட்டி

Published on 01/07/2019 | Edited on 02/07/2019

 

கூட்டணியை உடைக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. நான் சாதாரண தொண்டன். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என நான் மட்டுமல்ல, கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் பேசினார்கள். நான் பேசியது தவறு என்றால் அந்தக் கூட்டத்திலேயே கே.எஸ்.அழகிரி கண்டிக்காதது ஏன்? ரஜினிக்கு எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரும் நட்பாக இருக்கிறார்கள். நான் மட்டுமா அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். எத்தனை காலம்தான் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது என கே.என்.நேரு பொதுமேடையில் பேசியது குறித்து கருத்து கேட்டார்கள். அதற்கு பதில் அளித்தேன். அதற்கு பிறகு கே.என்.நேருவும் விளக்கம் அளித்துவிட்டார். நானும் விளக்கம் அளித்துவிட்டேன். என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என்னை இடைநீக்கம் செய்துள்ளனர் என்கிறார் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன். 


 

 

karate thiagarajan



கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் ஏன்? உள்ளிட்ட நக்கீரன் இணையதளத்தன் பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி பதில்:

 

தன் மீது அனுதாபம் வருவதற்காக, கட்சித் தொண்டர்களிடம் தான் நியாயமாகத்தான் பேசுவேன் என்று காட்டுவதற்காக இதுபோன்று சொல்லி வருகிறார். தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் எல்லோரையும் குறை சொல்லி வருகிறார். 

 

ஒவ்வொரு கட்சியிலும் அக்கட்சியில் இருப்பவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்காக அவர்கள் மீது எந்தக் கட்சியாவது நடவடிக்கை எடுக்குமா? 

 

karate thiagarajan


 

இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பில் என்ன காரணம் என்று சொல்லப்படவில்லை. அந்த கடிதத்தில், 'frequent anti party activities' தொடர்ந்து கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

அந்தக் கூட்டத்தில் பேசியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடவில்லை. எல்லாவற்றையும் அறிக்கையில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குழப்ப முயற்சிக்கிறார். அது நடக்காது.
 

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல்காந்தி வந்ததை இந்தியாவே கவனித்தது. அந்த மேடையில் ஸ்டாலின், வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை திமுக முன்மொழிகிறது என்றார். உடனே அடுத்து பேசும் ராகுல்காந்தி, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டு நாங்களும் கடுமையாக உழைப்போம் என்று சொல்கிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என்று இருவரின் பேச்சால் தெளிவாகிவிட்டது. 
 

இதற்கு பிறகு கராத்தே தியாகராஜன் ஒரு இடத்தில் பேசும்போது, போட்டி என்பது ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும்தான். ரஜினிகாந்த் முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தான் ரஜினிகாந்த் நண்பராக பேசுகிறேன் என்கிறார். இது கட்சியினுடைய விரோத நடவடிக்கை இல்லாமல் வேறென்ன?. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிராக, ரஜினிக்கு ஆதரவாக எந்த அடிப்படையில் பேட்டி கொடுத்தார்? தொடர்ந்து இதுபோன்று அவர் செயல்படுகிறார். 

 

trichy velusamy


 

மாவட்டத் தலைவர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் முக்கியமான ஒன்று. எதற்கெடுத்தாலும் இவர் ஏன் பதில் சொல்லுகிறார். இந்த உரிமையை இவருக்கு யார் கொடுத்தார்கள். கட்சியின் கொள்கை சார்ந்த விஷயங்களில் அந்தக் கட்சியின் தலைவர் பதில் சொல்வார் அல்லது அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் பதில் சொல்லுவார்கள். 
 

உள்ளாட்சித் தேர்தல் வருமா? வராதா என்பது தெரியாது. அடுத்து திமுக சந்திக்க இருப்பது சட்டமன்றத் தேர்தல். அந்த நோக்கத்தை குழப்புவது போல், அந்த நோக்கத்தை கெடுப்பதுபோல் தொடர்ந்து கராத்தே தியாகராஜனின் கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற கருத்துக்களை காங்கிரஸ் கட்சியில் பேசியிருந்தாலும் தவறு. திமுகவில் பேசியிருந்தாலும் தவறு. 


 

 

திருச்சியில் உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரியில் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் என்று பேசியிருக்கிறார். உங்கள் கட்சி அனைத்து இடத்திலும் நிற்பது என்பதோ, கூட்டணியோடு நிற்பது என்பதோ, கூட்டணிக்கு இடங்களை குறைத்து கொடுப்பது உள்ளிட்ட எல்லா உரிமைகளும் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதனை சொல்வதற்ககான இடம் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற மேடையா? உங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசியிருக்கலாம் என்று நான் அப்போதே கருத்து தெரிவித்திருந்தேன். 
 

கே.என். நேரு பேசியிருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். கே.என்.நேரு இருபது வருடத்திற்கு மேலாக மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். மந்திரியாக இருந்திருக்கிறார். அவர் என்றாவது இதுபோல் பேசியிருக்கிறாரா? இதுதானே முதல் தடவை. 

 

mkstalin - ks alagiri


 

இந்தப் பிரச்சனை வந்தவுடன், இந்த பிரச்சனை மேலும் பரவக்கூடாது என்பதற்காக கே.எஸ். அழகிரி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் செய்திருந்தால் இதுபோன்ற விவாதம் வந்திருக்காது. காங்கிரஸ் - திமுக கூட்டணி நலன் கருதி, கே.எஸ். அழகிரி எப்படி இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரோ, அதைப்போல் ஸ்டாலினும் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. தமிழ்நாட்டின் எதிர்கால நலன் கருதி இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்கிற பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது, திமுகவுக்கும் இருக்கிறது இந்தக் கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது. எல்லோருடைய நன்மைக்காக இதனை சொல்லுகிறேன். 

 

 

சார்ந்த செய்திகள்