நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: தமிழக அரசு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளதே..?
பதில்: ஆய்வுகளின்படி கடந்த ஐந்தாண்டுகளில் 81 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் தேர்வை எதிர்கொள்ள அச்சம் அல்லது தேர்வு முடிவுகளில் வந்த தோல்வியே ஆகும். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள்தான். 10, 12 ம் வகுப்பு படிக்கும் பதின்மப் பருவ மாணவர்களே மனமுதிர்ச்சியின்றித் தேர்வினால் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடக்கும் போது., அரசே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வை நடத்துவது எந்த வகையில் ஏற்புடையது..? அந்தத் தோல்வியை நம்முடைய குழந்தைகளின் பிஞ்சு மனங்கள் எப்படித் தாங்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழக அரசிடமும், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடமும் நாம் எழுப்பும் கேள்வி, இன்னும் இந்தியா முழுமைக்குமே அந்தச் சட்டம் வரையறுக்கப்பட்டுச் செயலாக்கத்திற்கு வருவதற்கு முன்பு, பிற மாநிலங்கள் எதுவுமே இன்னும் செயல்படுத்தாத போது, தமிழகத்தில் அவசர அவசரமாக 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை கொண்டு வருவதற்கான தேவை என்ன வருகிறது?
மூத்த மனநல மருத்துவர் ஐயா ருத்ரன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் சரியாகப் படிப்பதில்லை என்றே அதிகளவில் பெற்றொர்கள் தம்மிடம் அழைத்து வருவதாகக் கூறுகிறார். ஆகவே 6 வயது, 8 வயது பிள்ளைகளை வன்புணர்வு செய்வது எப்படி உடல்ரீதியாகச் சிதைக்குமோ அப்படியே இந்தத் தேர்வுகள் குழந்தைகளை மனரீதியாகச் சிதைக்கும். எனவே இதுவும் ஒரு வன்கொடுமைதான். இந்தத் தேசத்தை ஆளும் தலைவர்களில் யாராவது ஒருவர் கூறுங்கள், உங்களில் யார் 5 மற்றும் 8ஆம் வகுப்புத் தேர்வினை எழுதினீர்கள்? இந்த நாட்டில் எத்தனையோ மாமேதைகள் பேரறிஞர்கள் எல்லாம் 5ஆம் வகுப்பு 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை எழுதித்தான் வந்தார்களா?
தேர்வு! தேர்வு! என்று நீட் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் நுழைவுத் தேர்வை வைக்கும் இந்தத் தேசத்தை ஆளும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தாங்கள் என்ன தேர்வை எழுதி தங்களது தகுதியை நிருபித்து வந்தனர்?
பாரம்பரிய விதைகளையே அந்நிய முதலாளிகளுக்கு விற்ற இவர்கள் பிஞ்சுகளைக் கூறுபோடமாட்டார்கள் என நினைப்பது அர்த்தமற்றது. நாம் பலமுறை இதைக் கைவிடவேண்டும் என்று பேசியாகிவிட்டது. நாங்கள் கேட்பது சுவர் இல்லாத கல்வி, தேர்வு இல்லாத தேர்ச்சி. எட்டாம் வகுப்புவரை எந்தத் தேர்வுமே தேவையில்லை. ஒன்பதாம் வகுப்பில் ஒரு மாதிரி தேர்வு, பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்ற முறையே போதுமானது. அந்தக் கல்விமுறையே பல அறிஞர்களை உருவாக்கியுள்ளது. உலகிலேயே கல்வியில் முதலிடத்தில் உள்ள தென்கொரியா எட்டு வயதிலேயே தன் நாட்டின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கிறது. நாம் அந்த வயதில் பொதுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகிறோம். அதிகாரம் நிரந்தரமானது என்று நினைத்துக்கொண்டு தன்னிச்சையாக இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த நினைப்பது வேடிக்கையானது. இவ்வாறு கூறினார்.