மத்திய பா.ஜ.க. மோடி அரசின் பெட்ரோல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், வேலை இல்லா திண்டாட்டத்தைப் போக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுக்க தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் இன்று 20ந் தேதி கருப்புக் கொடி கட்டி ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான அந்தியூர் செல்வராஜ் தலைமையில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுமுடியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வழக்கறிஞர் ரமேஷ்குமார் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் மத்திய பா.ஜ.க.அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதேபோல், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஈரோடு மாவட்ட கட்சி அலுவலகமான ஜவஹர் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துணைத் தலைவர் சுரேஷ் தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துக் கண்டன கோசங்களை எழுப்பினார்கள். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 60 வார்டுகளிலும் தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு சம்பத் நகரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அந்தந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.