அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டங்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி தெற்கு ஒன்றியம், வந்தலை கூடலூர் ஊராட்சியில் நடைபெற்றது. புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.என் சிவக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி ப.குமார் தலைமை வகித்தார்.
திரைப்பட இயக்குநர், நடிகர், அதிமுக தலைமை கழக பேச்சாளர் சி.ரங்கநாதன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய, தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் எம்.பி ப.குமார், “எம்ஜிஆரால் முதலமைச்சர் ஆனவர் கலைஞர்; ஒரு நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் யார் என்றால் கலைஞர் முதல், அவரது குடும்பத்தில் இருக்கின்ற உதயநிதி வரை. நன்றி விசுவாசம் இல்லாத குடும்பம் ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது கலைஞரின் குடும்பம் தான். 52 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஒரு தீய சக்தியை அகற்ற வேண்டும் என தொண்டர்களும், எம்.ஜி.ஆரும் அதிமுகவை ஆரம்பித்தார்களோ அந்த நோக்கம் இன்றைய தினம் வரை வலுவோடு தான் இருக்கிறது.
நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களித்தார்கள். அதிலும் 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது அதிமுக. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் ஒன்றை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாம் ஆட்சியை இழந்தோமே தவிர மிகப்பெரிய வெற்றியை எல்லாம் ஸ்டாலின் பெறவில்லை.
ஸ்டாலின் மகன் சொன்னார் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட்டுக்கு விலக்கு என்று, ஆட்சிக்கு வந்ததும் விட்டுவிட்டார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது இதை மனதில் வைத்து இப்பொழுது கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். தமிழகத்தை ஆளும் ஸ்டாலின் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்கு மாறாக, இப்பொழுது கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் எதற்கு? எதற்கும் பிரயோஜனமில்லை.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை தூக்கிக்கொண்டு எல்லா ஊர்களுக்கும் சென்றார். இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்பாக, ஒரு முட்டையை கையில் எடுத்துக் கொண்டு திரிகிறார்” என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம் பாலன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.டி.எம் அருண் நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.