உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரங்குடியில், விருதுநகர் அதிமுக மேற்கு மா.செ. ராஜேந்திரபாலாஜி அளித்த தடபுடல் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சாத்தூரைக் கடந்தபிறகு, அங்கே நிர்வாகிகளுக்கிடையே கைகலப்பாகி, அதிமுக நகரச் செயலாளர் இளங்கோ அளித்த புகாரின் பேரில், சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானதைத் தொடர்ந்து, ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவாகியிருக்கிறது.
என்ன செய்தாராம் ராஜேந்திரபாலாஜி?
சாத்தூர் கிழக்கு ஒன்றியம் ஏ.ராமலிங்காபுரம் அதிமுக கிளைச் செயலாளர் வீராவுரெட்டி அளித்த புகாரில், ‘நான் சாத்தூர், வெங்கடாசலபுரம் கிழக்கு, புது பஸ் ஸ்டாப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரனுடன் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, ராஜேந்திரபாலாஜி காரிலிருந்து இறங்கி, என்னை அடித்துக் காரில் போடச் சொன்னதும், அவருடைய ஆதரவாளர்கள் ராசு, ஹரிசுதன் என்ற மணி, ஐ.டி.விங் பாண்டியராஜ், மேலும் 5 பேர் என்னை மாறி மாறி கையால் அடித்து, எங்கும் தப்பித்து ஓடவிடாமல் வழிமறித்து, ஸ்கார்பியோ காரில் ஏற்றினார்கள். காருக்குள் இருந்த மாரிக்கனி மற்றும் மணி ஆகியோர் என்னை அசிங்கமாகப் பேசி, கையால் கன்னத்தில் அறைந்தார்கள். எங்கள் கட்சிக்காரர்கள் வந்தவுடன், காரிலிருந்து என்னை இறக்கிவிட்டு, உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று கொலை மிரட்டல் விடுத்தார்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் என அடிதடி அரசியலை, விருதுநகர் மாவட்டத்தில் கையில் எடுத்திருக்கின்றனர் அதிமுகவினர்!