Skip to main content

இ.பி.எஸ். எடுத்த முடிவு; தகராறில் முடிந்த பூத் கமிட்டி கூட்டம்! 

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

The decision made by EPS  Booth committee meeting ended in dispute!

 

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (3ம் தேதி) நடைபெற்றது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த அனந்தமங்கலம் பி. சுப்ரமணியம் என்பவரைப் பதவியிலிருந்து நீக்கி, புதிய ஒன்றிய செயலாளராக ரங்கராஜன் என்பவரை நியமனம் செய்திருந்தார்.

 

அதன் பிறகு கட்சியின் சார்பில் நடைபெற்ற அதிமுகவின் 52வது ஆண்டு விழாவில் நீக்கப்பட்ட அனந்தமங்கலம் பி. சுப்ரமணியம், தனது ஆதரவாளர்களுடன் அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். ஆனால், மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் அறிவித்த கட்சி ரீதியான அதிமுகவின் 52வது விழா கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் சென்றார்.

 

இந்நிலையில், நேற்று நடந்த அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் அனந்தமங்கலம் பி. சுப்ரமணியம் கலந்துகொண்டார். கூட்டம் தொடங்கிய உடனே ஒன்றிய செயலாளர் மாற்றியதற்கான காரணத்தை கூறுங்கள் என அனந்தமங்கலம் பி. சுப்ரமணியம் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். மேலும் மாவட்டச் செயலாளரை பேசவிடாமலும், கூட்டத்தை நடத்த விடாமலும் செய்தனர். இதனால், அங்கு தகராறு ஏற்பட்டு  தள்ளுமுள்ளும் நடந்தது. 

 

தொடர்ந்து சுப்ரமணியம் ஆதரவாளர்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பூத் கமிட்டி பேப்பர்களை கிழித்து எறிந்தனர். இதனால் பூத் கமிட்டி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, பூத் கமிட்டி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் அறிவித்து விட்டு, கூட்டம் நடக்கும் அரங்கத்தை விட்டு வெளியேறினார்.

 

 

சார்ந்த செய்திகள்