நாடாளுமன்ற மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது, பாஜக எம்பிக்கள் எதிரித்து குரல் எழுப்பினர்.
தயாநிதி மாறன் பேசுகையில், எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் வடமாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்ததால் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தமிழகம் ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நீட், இந்தி திணிப்பு போன்றவற்றால்தான் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. 2014ம் ஆண்டு தேர்தலில் பணபலத்தால் அதிமுக வென்றது. தமிழ்நாட்டில் ஊழலில் ஊறி இருக்கும் அரசு ஆட்சியில் உள்ளது. பதவியில் உள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளன. தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது.
மக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலகம் வெப்பமயமாகி வருவதால் 2020ல் நாட்டில் சென்னை உட்பட பல நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும். தமிழக அரசின் கல்வி முறையை ஏன் மாற்றுகிறீர்கள்? தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்க கூடாது. குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது என்றார்.
தயாநிதி மாறன் பேசும்போது பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் சம்மந்தமின்றி தயாநிதி மாறன் பேசுகிறார் என்று பாஜக எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.