தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு சேகரிப்பில் கட்சியினரும், சுயேச்சைகளும் தீவிரமாக இயங்கிவருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்படி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர், “திமுக கட்சியின் தனிப்பட்ட சட்ட விதிகளின்படி திருவாரூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் முதல்வராக வரமுடியும். இங்கு மன்னராட்சி நடைபெறுகிறது. ஸ்டாலின் மன்னராகப் பதவியேற்று எட்டு மாதங்கள் முடிந்த நிலையில், அவர் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிட்டார். முதல்வரை இப்போது நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஊரக நகர்ப்புற நகராட்சி தேர்தலுக்காக திமுகவினர் முழு முகத்தையும் காட்டவில்லை. தேர்தல் முடிந்தவுடன் முகமூடியை பழையபடி கழற்றி விடுவார்கள். முதல்வராக உள்ள ஸ்டாலின், ஆளும் திறமை இல்லாதவர். பொங்கல் பரிசு முறைகேடு செய்த அமைச்சர், அத்துறை செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பெயரளவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதுவே, ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்.
எங்கள் ஆட்சியின் போது கொடுத்த பொங்கல் பரிசு பற்றி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினால் எந்த குறையும் கூற முடியவில்லை. வீட்டிலிருந்த மேக்கப் போட்டுக்கொண்டு பொம்மை போன்று தலைமைச் செயலகம் வந்து ஏசியில் உட்கார்ந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்று தூங்கி விடுவார். விழுப்புரம் நகரத்தில் கொண்டுவரப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடினார்கள்” என சி.வி. சண்முகம் பேசினார்.
திமுகவைப் பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சி.வி.சண்முகம் பேசிக் கொண்டிருந்த போது, போதையிலிருந்த ஒரு ஆசாமி முன்னாள் அமைச்சரின் பேச்சை நிறுத்துமாறு கத்தி சத்தம் போட்டார். இதைக் கண்டு ஆவேசமடைந்த சண்முகம், “இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பொன்முடி வந்தாலும் ஸ்டாலின் வந்தாலும் நான் பயப்பட மாட்டேன். நான் இங்கேயே இரவு 12 மணிவரை நிற்கிறேன். என்னை வந்து மிரட்டிப் பாருங்கள். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்களும் எங்கள் கட்சி தொண்டர்களும் பயப்பட மாட்டோம். 2006ஆம் ஆண்டு தேர்தலின் போது கத்தியால் என்னை வெட்டியபோது குனிந்ததால் மயிரிழையில் உயிர் தப்பினேன். அப்படியிருந்தும் சாவிற்கு அஞ்சவில்லை” என ஆவேசமாகப் பேசினார். அப்போது, அதிமுக கட்சியினர் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் திடீரென்று வாகனங்களை மறித்தனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதன்பிறகு போதை ஆசாமியைப் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அழைத்துச் சென்றனர்.