திமுக தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் இன்று (20.11.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், எ.வே. வேலு, ஐ. பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், “தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்தி மொழிக்கு விழா எடுப்பது, சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. தொடர் ரயில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததது, மாநில அரசுக்கான நிதியை விடுவிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கும், வரி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில், பிரதமர் மோடி அமைதி காப்பது அம்மாநிலத்தை மத்திய அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. எனவே இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தக் கோரிக்கை விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகும் வகையில் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.