சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிகுறிச்சி கிராமத்தில் கடந்த 11ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு, ப. சிதம்பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த வாக்குவாதத்திற்குப் பிறகு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பாண்டி வேலுவிடம் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், கூட்டத்தில் மற்றவர்களைப் பேசவிடாமல் இடையூறு செய்து ஒழங்கீனமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது விளக்கத்தை அளிக்க தவறும்பட்சத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.