பெரியார் பற்றிய பேச்சுக்காக ரஜினிக்கு எதிராகக் காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. "ரஜினி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும். இல்லையெனில் அவரது போயஸ்கார்டன் வீடு முற்றுகையிடப்படும்' என பெரியார் அமைப்புகள் அறிவித்தன. தி.மு.க., வி.சி.க., ம.தி.மு.க., காங்கிரஸ் தரப்பிலிருந்தும் அறிக்கைகள் வந்தன. ரஜினியின் கருத்துக்கு பா.ஜ.க.வுடன் இறுகக் கைகோத்திருக்கும் அ.தி.மு.க.விலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.வுக்காக மண்சோறு சாப்பிட்டு, காலில் செருப்புப் போடாமல், தாடியை ஷேவ் பண்ணாமல் புரட்சி செய்தவர்கள் நிறைந்த அ.தி.மு.க.வில், பெரியார் மீதான அவமதிப்புக்கு எதிராக குரல் எழுவது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
தமிழக துணை முதலமைச்சரான ஓ.பி.எஸ்., "பெரியாருடைய கருத்துகள் கோபுரத்தில் வைக்கப் பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் இந்த உயரத்துக்கு வந்திருப்பதற்கு காரணம் பெரியார்தான். அவர் குறித்து பேசும்போது முழுமையாகத் தெரிந்துகொண்டு பேசவேண்டும்'' என அதிருப்தி தெரிவிக்க, தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார், "தந்தை பெரியார் பெயருக்கு களங்கம் விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடைபெறாத ஒரு விஷயத்தைச் சொல்லி மக்களை திசைதிருப்பும் விஷயத்தில் ஏன் ஈடுபடவேண்டும்?'' என ரஜினி நோக்கி கேள்வியெழுப்பியிருக்கிறார்.
அமைச்சர் செல்லூர் ராஜுவோ, "ரஜினியை யாரோ தவறான வழியில் நடத்துகின்றனர்'' என கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்.
2017 டிசம்பரில், தான் அரசியலுக்கு வரப் போவதாகவும் தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் ரசிகர்களின் காத்திருப்புக்குப் பதிலளித்தார் ரஜினி. எனினும் அடுத்தடுத்து படங்களில் நடித்த அளவுக்கு அரசியல் பணிகளில் வேகம்காட்டவில்லை.
இருந்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொட்டு, பா.ஜ.க. தொடர்பான விஷயங்களில் மட்டும் ரஜினி அவ்வப்போது கருத்து தெரிவித்துவந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு எந்த ஆதாயமும் இல்லாமல் போனது. உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ஜ.க. கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. ஜெ. மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. அரசு நீடிப்பதற்கும், பிளவுபட்ட இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இணைவதற்கும் பா.ஜ.க.தான் காரணம் என்றாலும், வரும் சட்ட மன்றத் தேர்தலில் ரஜினியை முன்னிறுத்தி மக்களின் பல்ஸ் பார்க்கும் முடிவில் பா.ஜ.க. இருக்கிறதோ என்ற சந்தேகம் அ.தி.மு.க.வுக்கு எழுந்துள்ளது.
அதன் வெளிப்பாடே தற்போது அ.தி.மு.க. தரப்பிலிருந்து ரஜினிக்கு எதிராக எழுந்துள்ள கண்டனக் குரல்கள் என்கிறார்கள் அரசியலின் சுழிபார்க்கத் தெரிந்தவர்கள். இ.பி.எஸ்.ஸையும் அவருக்கு நெருக்கமான அமைச்சர்களையும் தவிர, அ.தி.மு.க.வின் மற்ற நிர்வாகிகள் பலரும் "பா.ஜ.க. கூட்டணியால்தான் நமக்கு கெட்ட பெயர்' என பொதுவெளியில் பேசுவதும் தொடர்கிறது.