தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் மத்தியில் பாஜக கூட்டணி அதிக இடங்களை பெறும் என்றும், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக அமமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், இந்த கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்கள் வெளியிட்டதுதான். காஞ்சிபுரத்தில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இவ்வளவு சதவீதம் வாக்குகள் பெறும் என்று தெரிவித்துள்ளது ஒரு கருத்துக் கணிப்பு. இதிலிருந்தே கருத்துக் கணிப்புகளை ஏற்க வேண்டாம் என்பது தெரிய வருகிறது.
இன்னொரு தகவல் என்னவென்றால், கருத்துக் கணிப்புகள் வெளியான உடன் இன்று மும்பை பங்கு சந்தை மதிப்புகள் உயர்ந்ததாக கூறுகிறார்கள். பங்கு சந்தை மதிப்புகளை உயர்த்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை வெளியிட்டார்கள் என்று வடமாநிலங்களில் உள்ளவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று மாலை 6 மணிக்கு 7வது கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைகிறது. உடனே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகிறது. இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 59 தொகுதிகளை தவிர்த்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிட்டார்களா? நான் அமமுகவில் இருக்கிறேன். நான் வாக்களித்து விட்டு வரும்போது இந்தக் கட்சிக்குதான் வாக்களித்தேன் என்று எல்லோருக்கும் தெரியும். பொதுமக்களில் இருப்பவர் ஒருவர் தான் இந்தக் கட்சிக்குதான் வாக்களித்தேன் என்று எப்படி வெளிப்படையாக கூறுவார்?
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் வெளியான கருத்துக்கணிப்புகளை தாண்டி அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுக களத்திலேயே இல்லை. தேர்தல் பிரச்சாரத்தில் அவர்களை பொதுமக்கள் வரவேற்கவும் இல்லை. தமிழக அரசியல் களத்தில் அமமுக - திமுக இடையேதான் போட்டி. மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு கூறினார்.