விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரங்குடியில், விருதுநகர் அதிமுக மேற்கு மா.செ. ராஜேந்திரபாலாஜி அளித்த தடபுடல் வரவேற்பை ஏற்றுக்கொண்டார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. அவர், சாத்தூரைக் கடந்தபிறகு அங்கே நிர்வாகிகளுக்கிடையே கைகலப்பாகி, சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
என்ன நடந்தது?
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் மோதல் வலுத்த நிலையில், ரவிச்சந்திரன் விருதுநகர் கிழக்கு மா.செ. ஆக்கப்பட்டார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, ராஜேந்திரபாலாஜியும் ராஜவர்மனும் ஒன்றுசேர, ராஜவர்மனுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்துவரும் சாத்தூர் ஒ.செ. சண்முகக்கனி ரவிச்சந்திரனின் ஆதரவாளராகி, உள்ளூரில் ராஜேந்திரபாலாஜி மற்றும் ராஜவர்மனுக்கு எதிராக அரசியல் செய்துவருகிறார்.
எடப்பாடி பழனிசாமி, ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஒரே காரில் சாத்தூர் அருகிலுள்ள வெங்கடாசலபுரத்தில் நான்கு வழிச்சாலையைக் கடந்தபோது, விருதுநகர் கிழக்கு மா.செ. ரவிச்சந்திரன் சார்பில் அதிமுகவினர் வரவேற்பளித்தனர். அப்போது, ராஜேந்திரபாலாஜியை சந்தித்து உதவி பெறுவதை வழக்கமாகக் கொண்ட, சாத்தூர் – ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டரான வீராரெட்டி, சத்தமாக ஏதோ பேசிவிட, பின்னால் வந்த வாகனங்களில் இருந்து இறங்கியவர்கள் ஆவேசமாகத் தாக்கினார்கள். நடந்த அடிதடியை விலக்கிவிட்ட காவல்துறை, ‘போகட்டும்.. போகட்டும்..’ என்று வாகனங்கள் அனைத்தையும் அங்கிருந்து கிளப்பிவிட்டது.
இந்தக் களேபரம் நடந்தபோது, ராஜவர்மனிடம் சாத்தூர் அதிமுக நகரச் செயலாளர் இளங்கோ, ‘என்னண்ணே வந்த இடத்துல இப்படி?’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். அவரிடம் பேசிவிட்டு ராஜவர்மன் கார் கிளம்பிய நிலையில், இதைப் பார்த்து டென்ஷனான ஒ.செ. சண்முகக்கனி, தகாத வார்த்தையில் இளங்கோவை திட்டியதோடு, அடிக்கவும் செய்தார். இளங்கோவும் பதிலுக்குத் தாக்க, அப்போது சண்முகக்கனி தரப்பு ஆட்கள் நிறையபேர் சூழ்ந்துவிட்டனர்.
உள்ளூரில் அதிமுக ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனியிடம் அடிவாங்கிய வேதனையோடு, சாத்தூர் டவுன் காவல் நிலையம் சென்ற அதிமுக நகரச் செயலாளர் இளங்கோ அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவாகியிருக்கிறது.