மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை இன்று நடந்தது. இதனிடையே தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, இந்த தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு, அவரது மனு நிராகரிக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது. வேட்பு மனு ஏற்கப்பட்டதை அடுத்து வைகோ மாநிலங்களை உறுப்பினர் ஆவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய நாஞ்சில் சம்பத்,
வைகோவின் மனுவை சட்டப்படி நிராகரிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இன்று மனு ஏற்கப்பட்டிருக்கிறது. வைகோ நாடாளுமன்றத்திற்கு செல்கிறார். வடக்கு செய்கிற இடக்கை, வடக்கிலே சந்திக்கிற வல்லமை உள்ள வாலிபர்களின் ஏவுகணை டெல்லி செல்கிறது. வண்ண மலர் பேரழகை சொல்லில் வைத்தவர் நாடாளுமன்றம் செல்கிறார். வரிப்புலியின் உருமலுக்கு ஓசை வைத்தவர் டெல்லி செல்கிறார்.
எல்லாவற்றையும், இந்தியாவை காவிமயமாக்க துடிக்கின்ற ஆசாட பூபதிகளுடைய அநியாய சேட்டைகளை அலைகடல் ஓசையில் கண்டிப்பதற்கு தமிழகம் ஒரு போர்குரலை டெல்லிக்கு அனுப்புகிறது. இந்த வாய்ப்பை அண்ணனுக்கு வழங்கிய திமுகவுக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெரும்பாண்மை இருக்கிற காரணத்தினால் நினைத்ததையெல்லாம் நடத்திவிடலாம் என்று கருதுகிற பாசிச சக்திகளுக்கு வைகோ பயங்கர அச்சுறுத்தலாக இருப்பார். இதை நாடு பார்க்கப்போகிறது, நாடாளுமன்றத்தில் நாம் அதனை கேட்கப்போகிறோம் என்றார்.