விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் நா.புகழேந்தி போட்டியிட்டார். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளராக நாராயணன் போட்டியிட்டார். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இரண்டு தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.
அப்போது அவரிடம், அதிமுகவில் சசிகலா, தினகரன் சேர்க்கப்படுவார்களா? என்றதற்கு, சசிகலா உள்ளிட்ட 16 பேரை கட்சியில் இருந்து நீக்கியது நீக்கியது தான். மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை. அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்ப்பது பற்றி கட்சியின் பொதுக் குழு தான் முடிவு செய்யும் என பதிலளித்தார். மேலும் அவர், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.