திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாணியம்பாடி அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சிகளின் முகவர்களும் இங்கு பாதுகாப்புக்கு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆலங்காயம் திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் அசோகன், கட்சியினர் சிலருடன் அங்கு சென்றுள்ளார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பிலிருந்த பெண் உதவி ஆய்வாளர் ராணி என்பவருக்கும் இவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து அசோகன் தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.
பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராணி புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் ஆலங்காயம் திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் அசோகன், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தண்டபாணி ஆகியோர் மீது வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.