உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் காலை உணவு அருந்தியதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இன்று காலை டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தலித்துகளுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக, அவர்கள் உணவு விடுதி ஒன்றில் சோலா பூரி தின்றதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும், அதற்கான ஆதாரமாக புகைப்படம் ஒன்றையும் அவர்கள் பதிவிட்டனர்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி, ‘அந்தப் புகைப்படம் காலை 8 மணிக்கு முன்பாக எடுக்கப்பட்டது. நாங்கள் காலை 10.30 முதல் மாலை 4.30 மணிவரை அடையாள உண்ணாவிரதம் தான் இருந்தோமே தவிர, அது காலவரையற்ற உண்ணாவிரதம் கிடையாது. நாட்டை முறையாக ஆட்சி செய்யாமல், நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு என்ன ஆர்வமோ’ என பேசியுள்ளார். இவரும் அந்தப் புகைப்படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.