தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியிருக்கிறது. இச்சட்டத்தில், மத்திய தலைமை தகவல் ஆணையரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்ட திருத்த வரைவு மசோதா இருப்பதாக திமுக, காங்கிரஸ், திருனாமுல்காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம் மற்றும் அதிகாரம் மிக்கதும் சுதந்திரமானதுமான இந்த அமைப்பின் தலைமைத் தகவல் ஆணையருக்குரிய அதிகாரத்தை பறிக்கும் இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என அவையில் குரல் எழுப்பினர்.
காங்கிரஸ் சார்பில் பேசிய கார்த்தி சிதம்பரத்தின் கன்னி பேச்சு, பாஜக அமைச்சர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சட்டத்திருத்த மசோதாவில் உள்ள ஆபத்துகளையும், குறைகளையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியது போல விவரித்து பேசிய கார்த்தி சிதம்பரம், தனது உரையின் கடைசியில் பாஜகவை தாக்கிய தாக்குதல்தான் மத்திய அமைச்சர்களை பதட்டமடைய வைத்திருக்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவிலுள்ள ஆபத்துகளை சுட்டிக்காட்டி விட்டு, "இந்த அவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 303. இதில் பல பேர் சட்டம் படித்தவர்கள். இந்திய தண்டனைச் சட்டத்தின் 303-வது பிரிவு எதைக் குறிக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த 303 - வது பிரிவு, டெத் சென்டன்சை குறிக்கிறது. அதாவது மரண தண்டனையை குறிக்கிறது. ஆக, 303 உறுப்பினர்கள் இருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு மரண தண்டனை கொடுக்கிறீர்கள். அதேபோல, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டையர் என்பவர் கையில் இருந்தது 303 ரக துப்பாக்கி! அதேபோன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை 303 ரக துப்பாக்கி போல சுட்டுக்கொல்கிறீர்கள் " என கடுமையாக பாஜகவினரை தாக்கினார்.
நாடாளுமன்றத்தில் 303 உறுப்பினர்களை கொண்ட பாஜகவினரை, அதே நெம்பருக்குரிய சட்டப்பிரிவின் தன்மையையும் சில சம்பவங்களையும் ஒப்பிட்டு ஆவேசமாகப் பேசியதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது பாஜக எம்.பி.க்கள் பலரும் மேஜையைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம் கார்த்தி சிதம்பரத்தின் அந்த தாக்குதல், மத்திய அமைச்சர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவை முடிந்ததும் வெளியே வந்த கார்த்தி சிதம்பரத்திடம், ' என்ன மிஸ்டர் 303? அசத்திட்டீங்க போங்க!' என பலரும் கைக்குலுக்கி அவரது கன்னிப் பேச்சி புகழ்ந்தனர். மகனின் பேச்சை அறிந்து, ' வெல்டன் ' என பாராட்டியுள்ளார் ப.சிதம்பரம்!