உலகம் முழுவதும் கரோனாவால் மக்களும் அரசுகளும் முன்னெப்போதுமில்லாத சிரமங்களை அனுபவித்துவருகின்றனர். இந்நிலையில் மத்திய பா.ஜ.க. மோடி அரசு, மக்களின் வாழ்வாதாரம் பற்றிய சிந்தனையில்லாமல் நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களை வீதியில் அலையவிட்டு, அவர்களின் துன்ப துயரங்களை வேடிக்கை பார்க்கிறதென என பா.ஜ.க அரசுமீது குற்றச்சாட்டுகளை வைத்து இந்தியா முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே 19-ஆம் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கரோனா கால நெருக்கடிகளைச் சமாளிக்க தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ 10,000 நிவாரணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை பலவீனமாக்கக்கூடாது, புலம்பெயர்ந்த தொழிலாளர் அனைவரும் பாது காப்புடன் அவரவர் ஊர்திரும்ப நடவடிக்கை, தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைக்கக்கூடாது, ஓய்வுதியம் பெறுவோர், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டும், டாஸ்மாக் கடைகளைத் திறந்து நோய்த்தொற்றைப் பரப்பக்கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன் வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் செய்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி என 27 இடங்களிலும் தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான ஊர்களிலும் கம்யூனிஸ்டுகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.