புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 133 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 133 ஆவது பிறந்தநாளில் அவரை வணங்குவதில் நான் பெருமை கொள்கிறேன். புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாரதிதாசன் எழுதியது தான். புதுவையோடு ஒன்றியவர்கள் பாரதிதாசனும் பாரதியாரும். அதனால் அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்.
புதுச்சேரியில் பெண்களுக்கு வாரத்தில் 2 மணி நேர வேலைக் குறைப்பு குறித்து மக்களிடம் வரவேற்பு நன்றாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் இருந்து வரவேற்பு இருக்காது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா இதனை பெண்ணடிமைத்தனம் என சொல்கிறார். இது எப்படி என தெரியவில்லை. பெண்கள் பணியாற்றி முன்னேறி வருகிறார்கள். அவர்களுக்கு சின்ன சலுகையாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதனை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.
கலைஞரின் நினைவுச் சின்னமான பேனாவிற்கு மத்திய அரசு சுற்றுச்சூழலை மனதில் வைத்து அனுமதி வழங்கியுள்ளது. பொத்தாம் பொதுவாக நாம் இதனை அனுமதி என்று சொல்வதை விட அனைத்து விதமான பாதுகாப்புடன் அது அமைக்கப்படுவதால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அரசு பின்பற்ற வேண்டியது தான்” என்றார்.
கர்நாடகத்தில் தமிழ்தாய் பாட்டு பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தமிழிசை, “அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள்” என்றார்.