நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி - விஜய் வசந்த், திருவள்ளூர் - சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி - கோபிநாத், சிவகங்கை - கார்த்தி சிதம்பரம், விருதுநகர் - மாணிக்கம் தாக்கூர், கரூர் - ஜோதிமணி, கடலூர் - டாக்டர் விஷ்ணு பிரசாத், மயிலாடுதுறை - சுதா மற்றும் திருநெல்வேலி - ராபர்ட் புருஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனையொட்டி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 12 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வருகிறார். அதன்படி ஏப்ரல் 12 ஆம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புருஸை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும், அன்றைய தினம் மாலை கோயம்புத்தூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஏப்ரல் - 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி., அவர்களுடன் இணைந்து வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி (12-04-2024) வெள்ளிக் கிழமையன்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை மாவட்டம் செட்டிபாளையம் எல் அண்ட் டி பை-பாஸ் அருகில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.