ஒரே கவனம், 2021 சட்டமன்றத் தேர்தல்தான் என்பதை மனதில் வைத்து செயல்படும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சிக்குள் அதிரடி நீக்கம்,—சேர்ப்பு வேலைகளில் இறங்கிவிட்டார். ஊரக உள்ளாட்சியின் மறைமுகத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து சொந்தக் கட்சி வேட்பாளர்களை குப்புறத் தள்ளிய கட்சிப் பொறுப்பாளர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யும் வேலையை சேலம் மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின்.
சேலம் மாவட்டம் ஏற்காடு தி.மு.க. ஒ.செ. ஏ.டி.பாலுவை கடந்த ஜன. 21-ஆம் தேதி கட்சியிலிருந்து கட்டம் கட்டியபோதே, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜாவும் சீக்கிரமே கட்டம் கட்டப்படலாம் என்ற பேச்சு மாவட்ட உ.பி.க்கள் மத்தியில் ஓடியது. ஆனாலும் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தின் மீதுள்ள மரியாதையாலும் வீரபாண்டியாருக்கு சேலம் மாவட்டத்தில் இன்னமும் உள்ள செல்வாக்காலும் பொறுமை காத்தார் ஸ்டாலின். அதேநேரம் வீரபாண்டிராஜாவின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க மாஜி எம்.பி. கந்தசாமியை நியமித்தார்.
கந்தசாமியின் தீவிர விசாரணையில் அயோத்தியா பட்டணம், ஏற்காடு, சேலம் ஒன்றியங்களில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும்படி கவுன்சிலர்களிடம் ராஜாவே சொன்னதாக ஆதாரத்துடன் புகார் வாசித்தார்கள் உ.பி.க்கள். அனைத்தையும் அறிக்கையாக அறிவாலயத்தில் தாக்கல் செய்தார் கந்தசாமி. இதன் அடிப்படையில் கடந்த ஜன. 27-ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், குறிப்பாக அயோத்தியா பட்டணம் ஒன்றியக் கவுன்சிலர்கள், ஒன்றிய பொறுப்பாளரிடம் ஆர்.எஸ்.பாரதியும் டி.கே.எஸ்.இளங்கோவனும் நேரடி விசாரணை நடத்தினர்.
இதையடுத்தே கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து வீரபாண்டி ராஜாவை நீக்கிவிட்டு, மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கத்தை கிழக்கு மா.பொ.வாகவும், தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம்.செல்வகணபதியை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமித்து பேராசிரியர் பெயரில் அறிவிப்பு வெளியானது. வீரபாண்டி ராஜா மனசு உடைஞ்சு போய்விடக்கூடாது என்பதற்காக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.
ஸ்டாலினின் இந்த அதிரடி ஆக்ஷன் குறித்து அயோத்தியா பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் நம்மிடம் பேசும்போது, ""உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்து ராஜாவிடம் கொடுத்தோம். ஆனால் அவருக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்ததால் 6 சுயேட்சைகள் வெற்றி பெறும் அளவுக்குப் போனது. 10 கவுன்சிலர்கள் ஆதரவுடன் போட்டியிட்ட எங்க வேட்பாளர் தோத்துப் போய்ட்டார், ஆனா 9 பேர் ஆதரவுடன் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயித்து விட்டார்னா எப்படி? இப்போது தலைமை எடுத்திருக்கும் முடி வால் இனிமேல் சேலம் கிழக்கு மாவட்டத்தில் கோஷ்டிகள் தலையெடுக்காது'' என்கிறார்.
வீரபாண்டி ராஜா ஆதரவாளர்களோ, ""இந்த மாவட்டத்தில் நடக்கும் உள்ளடியையும் அதில் தலைமையின் பார்வையையும் ராஜா அறிவார். செயற்குழுவிலும் இதுபற்றி ஓப்பனாக பேசினார். உண்மைக்கு கொடுக்கப்பட்ட விலை இது'' என்கிறார்கள்.
சேலம் மாநகர சீனியர் உ.பி.ஒருவரிடம் நாம் பேசிய போது, "1973-லிருந்து 2013-ல் இறக்கும் வரை 40 ஆண்டுகள் இந்த மாவட்டத்தின் ஒரே மா.செ.வாக கோலோச்சியவர் வீரபாண்டியார். அவர் இருக்கும்போதே மாவட்ட தி.மு.க.வுக்குள் வளர ஆரம்பித்த அவரது மகன் செழியன், திடீரென மரணமடைந்தார். வீரபாண்டியார் இருந்தபோதே இந்த மாவட்டத்தில் நாங்கள் தேர்தலில் பலமான சரிவைச் சந்தித்திருக்கோம். எங்க கட்சி ஆட்சிக்கு வரும்போதுதான் வீரபாண்டியார் ஜெயிப்பார். ஆனாலும் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னா முன்னாடி வந்து நிற்பார். ஆனால் ராஜா அந்தளவுக்கு இல்லை.
இப்ப நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மேற்கு மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்தில் ஒரு இடத்தில் கூட தி.மு.க. ஜெயிக்கவில்லை. காரணம் மா.செ. எஸ்.ஆர்.சிவலிங்கத்தின் மந்தமான செயல்பாடுகள்தான். இருந்தாலும் அவரை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிச்சிருக்காங்க. இது பாரபட்சமான அணுகுமுறையா பார்க்கப்பட்டாலும் அவர், ஆளும்கட்சியிடம் விலை போகமாட்டார் துணிச்சலாக எதிர்த்து நிற்பார் என்பதால்தான். இனிமேலும் மா.செ.க்கள் உஷாராகவில்லையென்றால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்'' என்றார்.
நீக்கம் குறித்து விளக்கம் கேட்க வீரபாண்டிராஜாவை நாம் தொடர்பு கொண்டவுடன் செல்போனை அட்டெண்ட் செய்தவர், பதில் எதுவும் சொல்லாமல் கட் பண்ணிவிட்டார்.
நம்மிடம் பேசிய எஸ்.ஆர்.சிவலிங்கமோ, "கிழக்கு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றியை தலைமையிடம் சமர்ப்பிப்பேன்'' என்கிறார்.
சேலம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்தி செல்வனை நீக்கிவிட்டு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரை பொறுப்பாளராக நியமித்துள் ளார் ஸ்டாலின். காந்திசெல்வன், இரண்டாவது முறையாக மா.செ. பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளரான டி.எம். செல்வகணபதிக்கு பழைய அ.தி.மு.க.வினரின் சித்து வேலைகள் அத்துப்படி. அத்துடன் முதல்வர் எடப்பாடி யின் மாவட்டத்தில் தி.மு.க. திறமையாக அரசியல் செய்ய செல்வகணபதியை தலைமை நம்புகிறது. நம்பிக்கை பலிக்குமா? வீரபாண்டியார் கோட்டையில் நடந்த மாற்றத்திற்கு காரணம் துரோகமா என்பது போகப் போகத் தெரியும்.