தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக இன்று (18/01/2021) காலை 11.55 மணிக்கு டெல்லி செல்கிறார்.
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க., பா.ஜ.க. இடையான கூட்டணி தொகுதிகள் பங்கீடு குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இன்று காலை 11.55 மணிக்கு டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, இரவு 7.30 மணிக்கு அமித்ஷாவை சந்திக்க இருக்கிறார். பின் நாளை (19/01/2021) காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியுடனான சந்திப்பில் மெரினாவில் கட்டப்பட்டுவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா, காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல், கல்லணை சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களின் தொடக்க விழாக்களுக்கு அழைப்பு விடுக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.