திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி எழுதிய ‘பாதை மாறா பயணம்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “17 வயதில் கழகத்தில் இணைந்து கலைஞருடன் பயணித்து இன்று முதல்வர் தலைமையில் டி.ஆர்.பாலு திமுக பொருளாளராக உள்ளார். இப்புத்தகத்தின் இரண்டு பாகத்திலும் கிட்டத்தட்ட 65 ஆண்டுக்கால கழகத்தின் பயணம் குறித்து எழுதியுள்ளார்.
கலைஞர் கைது செய்யப்பட்ட போது, டி.ஆர்.பாலு அதை எதிர்கொண்ட விதம்; அந்த ஆக்ரோஷத்தை அனைவரும் பார்த்தோம். அன்றைய ஒட்டுமொத்த கழகத் தொண்டர்களின் வெளிப்பாடு தான் டி.ஆர்.பாலுவின் அந்த கம்பீரம்; அந்த ஆக்ரோஷம். அதுதான் டி.ஆர்.பாலு. சமீபத்தில் பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி ஒருவரைப் பார்த்து உனக்கு முதுகெலும்பு இல்லையா என நேரடியாகக் கேட்டவர் தான் டி.ஆர்.பாலு.
டி.ஆர்.பாலு மிகவும் கண்டிப்பானவர் என அனைவரும் சொன்னார்கள். ஒரு வார்த்தை அதிகமாகப் பேச மாட்டார் சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லிவிட்டுச் செல்வார். அது சரியோ தவறோ அது கலைஞராக இருந்தாலும் சரி இப்போதைய முதல்வராக இருந்தாலும் சரி. அதை அருகில் இருந்து நான் நேரில் பார்த்தவன். மிகவும் கண்டிப்பானவர்.
முதல்வர் மிகவும் கண்டிப்பானவர் என அனைவரும் சொல்லுவார்கள். ஒரு விஷயத்தைக் கூறினால், அது முடிந்து விட்டதா? என்ன நிலைமையில் இருக்கிறது? எனக் கேட்பதில் முதல்வரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. அத்தனை அமைச்சர்களும் கழகத்தின் மூத்த தலைவர்களும் முதல்வரைப் பார்த்துப் பயப்படுவார்கள். ஆனால், முதல்வர் ஒருவரைப் பார்த்துப் பயப்படுவார் என்றால் அது டி.ஆர்.பாலுவைப் பார்த்துத்தான்” எனக் கூறினார்.