
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளாதது; ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது; அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் உடனான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாமல் மௌனம் காத்தது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எடப்பாடி- செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் சுற்றிச் சுழன்று வருகிறது.
இந்த சூழலில், சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று முன் தினம் (05-04-25) நள்ளிரவு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. முன்னதாக, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய நிலையில், நேற்று முன் தினம் செங்கோட்டையன் நிர்மலா சீதாராமனை சந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, டாஸ்மாக் வழக்கை குறிக்கும் வகையில் ‘அந்த தியாகி யார்?’ என்ற பேட்ஜுடன் இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் டாஸ்மாக் வழக்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவையில் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தி கூச்சலிட்டதால், அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ஆனால், செங்கோட்டையன் மட்டும் சட்டப்பேரவையில் அமர்ந்து கோபிசெட்டிபாளையம் ஆடை தயாரிப்பு தொழிற்சாலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றினார். மேலும் சபாநாயகர் கோரிக்கையை ஏற்று, தான் அணிருந்திருந்த ‘அந்த தியாகி யார்?’ என்ற பேட்ஜ்ஜையும் செங்கோட்டையன் கழற்றினார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்த நிலையில், செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்து உரையாற்றியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.