
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் வருண் குமார் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் முன் வைத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, வருண் குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய வருவதால், தானும் தன் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், சீமான் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதுடன் ரூ. 2 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தனது மனுவில் வருண் குமார் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இரு தரப்பு வாதங்களைத் தொடர்ந்து கேட்டு வந்த நீதிபதி, சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (07.04.2025) மீண்டும் நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் ஆஜராகாமல் அவரது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்’ என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சீமான் தரப்பில், அவர் ஆஜராகக் கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கோரிக்கையை எற்றுகொண்ட நீதிபதி விஜயா, “நாளை (08.04.2025) காலை 10 மணிக்குள் சீமான் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.