
தமிழக சட்டப்பேரவையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், ‘அந்த தியாகி யார்?’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பேட்ஜை அணிந்து வந்தனர். தமிழக டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தியை சுட்டிகாட்டி ‘அந்த தியாகி யார்?’ என்ற பேட்ஜை அணிந்திருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், கையில் பதாகைகளை காட்டி அவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, அவையில் இருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர் கூறியதாவது, “டாஸ்மாக் வழக்கு குறித்து பேச அனுமதி அளிக்காததால் வெளியேறிவிட்டோம். உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு வந்த போது, அந்த சந்திக்க திராணி இல்லாத இந்த அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறது. அமலாக்கத்துறை தொடர்புடைய வழக்குகள் எல்லாம் வேறு ஒரு மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதை குறித்து தான் இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால், அதை பேச அரசு அனுமதிக்கவில்லை. இது மக்களுடைய கேள்வி. ஆனால், அதற்கு சட்டப்பேரவையில் அனுமதிக்கவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அதை பற்றி பேச வேண்டாம் என சட்டப்பேரவைத் தலைவரும், அவை முன்னவரும் தெரிவித்தார்கள். அதை நாங்கள் ஏற்றுகொண்டோம். ஆனால், தமிழ்நாடு அரசின் தொடர்புடைய டாஸ்மாக் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது, வேறு ஒரு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இந்த அரசு தெரிவித்ததை குறித்து தான் நாங்கள் கேள்வி எழுப்பினோம். எங்கு விசாரித்தாலும், இதை தான் விசாரிப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் விசாரித்தால் இவர்கள் செய்த தவறுகள் உடனுக்குடன் செய்திகள் வெளியாகும். அதை மறைப்பதற்கு தான், இந்த அரசு தில்லுமுல்லு வேலைகளை செய்கிறது” எனக் கூறினார்.