நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி எனத் தமிழக நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் திருச்சியில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நெல்லை - கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இன்று சென்னையிலிருந்து கிளம்பி விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதல்வர் ஸ்டாலின், சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மாலை சாலை மார்க்கமாக நாங்குநேரியில் நடக்கும் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்யவுள்ளார்.