தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வீடுகள் தோறும் கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, பொங்கல் வைத்து மக்கள் சூரியனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாந்தோப்பு காவலர் குடியிருப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்களின் குடும்பத்துடன் பொங்கல் திருநாளை பொங்கல் வைத்துக் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் குடும்பத்திற்குப் பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்!” எனக் கூறியுள்ளார்.
இவ்விழாவில் முதல்வருடன் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.