அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்தனர்.
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரியுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், “உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத்துறையின் சார்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் நீதிமன்றக் காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் கடந்த பின்பும் இன்னும் அவர் அமைச்சராக தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது, அரசியல் சாசன அமர்வுக்கு முரணானது.
இது தொடர்ந்தால் இந்திய மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சீர்குலைவை ஏற்படுத்தும். செந்தில் பாலாஜி கைதான உடன் அவரை முதலமைச்சர் அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். ஆனால் நீக்குவதற்கு பதிலாக முதலமைச்சரும் அமைச்சர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகியைப் போல் சித்தரித்துக் கொண்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தனர்.