Skip to main content

“அண்ணாமலையைப் போல் ஆளுநர் பேசுகிறார்” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

"Can you say that Modi has gone along with this?" - KS Alagiri

 

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “40 கிலோ மீட்டர் இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 40 பேர் இறந்தனர். இதற்காக மோடி துணை போய்விட்டார் எனச் சொல்ல முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை தமிழகக் காவல்துறை மீதும் அரசின் மீதும் குற்றம் சுமத்துவது அபத்தமானது. ‘பேனைப் பெருமாள் ஆக்குவது’ என்று சொல்லுவது போலப் பெரிதுபடுத்திப் பேசுகிறார். தமிழக அரசினைப் பொறுத்தவரை  எந்தத் தீவிரவாத அமைப்பிற்கும் ஆதரவளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் பொய்யான குற்றச்சாட்டை எழுப்புகிறார்கள்.

 

வெடிகுண்டு விபத்து தமிழக அரசால் மூடிமறைக்கப்பட்டது போலவும் காவல்துறை அதில் மெத்தனமாக இருந்தது போலவும் அண்ணாமலை முதல் ஆளுநர் வரை பேசுகின்றனர். இயக்கத்திற்கு அனுதாபிகள் இருக்கத்தான் செய்வார்கள். விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாளர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் கைது செய்துவிடவில்லை. அவர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள்.

 

அது போல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு யார் அனுதாபிகளாக இருந்தார்கள் என்பது தேசிய புலனாய்வு முகமைக்குத்தான் தெரியும். அவர்கள் அதைத் தெளிவுபடுத்திச் சொன்னால் மாநில அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். தேவை இல்லாமல் ஒரு அரசைக் குறை சொல்லுவது தவறு. 

 

ஆளுநர் குற்றச்சாட்டைச் சொல்லுவது தவறு. அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரதிநிதி அவர். முக்கிய ஆதாரங்கள் அளிக்கப்பட்டது என ஆளுநர் அண்ணாமலையைப் போலவே பேசுகிறார். 40 கிலோ மீட்டர் இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 40 பேர் இறந்தனர். இதற்காக மோடி துணை போய்விட்டார் எனச் சொல்ல முடியுமா? நான் அவ்வாறு சொல்ல விரும்பவில்லை” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்