இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதனையொட்டி அவர் இன்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார். அதன்தொடர்ச்சியாக நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் பட்ஜெட்டை 'மக்களை மறந்த பட்ஜெட்' என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஒன்றிய நிதி அமைச்சரின் நிதிநிலை அறிக்கை தமிழகம் மற்றும் தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என அடைமொழியிட்டு அழைப்பதே பொருத்தமானது. வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது. தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்கள் மத்திய நிதிநிலை அறிக்கையில் இல்லை. மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடருக்கு கோரிய நிவாரண நிதியும் ஒதுக்கவில்லை'' எனது விமர்சித்துள்ளார்.