Skip to main content

“எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை” - சு. வெங்கடேசன் எம்.பி. காட்டம்!

Published on 24/11/2024 | Edited on 24/11/2024
No matter how many times I tell you, it won't change Su Venkatesan MP

பொங்கல் திருநாளன்று பட்டய கணக்கருக்கான சி.ஏ. தேர்வுகள் நடத்துவதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் கைவிட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு தேதிகளை மாற்றுமாறு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்.

சி ஏ. பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2025) அன்றும், உழவர் திருநாள் (16.11.2025) அன்றும் முறையே வணிக சட்டங்கள் (Business laws மற்றும் திறனறிவு (Quantitative Aptitude) தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘அறுவடைத் திருநாளான’ பொங்கல் திருவிழா என்பது  தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதைக் கருத்தில் கொண்டு தேர்வர்களுக்குச் சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2025) தமிழகத்தில் போகி பண்டிகை ஜனவரி 13 ஆம் தேதியும், பொங்கல் திருநாள் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமானது ஜனவரி 15ஆம் தேதியும், உழவர் திருநாள் 16ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.  இதன் காரணமாக ஜனவரி 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்