உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதி உள்ள இடத்தில் கோயில் ஒன்று அமைந்திருந்தது. அதன்பின்னர் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டது எனக் கூறி சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்து மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அச்சமயத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதிக்கு ஆய்வுக் குழு சென்றடைந்தது. அப்போது ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் மக்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் கல் வீசுவதை நிறுத்துமாறு சம்பலில் உள்ள உள்ளூர் மக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இருப்பினும் அப்பகுதியில் இருந்த மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும், பதற்றமான சூழலும் நிலவியது. இந்த கல் வீச்சு சம்பவம் குறித்து டி.ஜி.பி. பிரசாந்த் குமார் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பாலில் உள்ள மசூதியில் ஆய்வு நடைபெற்று வருகிறது. சில சமூக விரோதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது. கல் வீச்சுக்காரர்களை போலீசார் அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.